Wednesday 7 September 2016

கோடகநல்லூர் - அகத்தியர் ஜீவநாடியில் வந்த தகவல் - 1


[இந்த தொகுப்பு "சித்தன் அருள்" வலைப்பூவில் வந்தது. தொகுப்பாளர் அனுமதியுடன் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.அகத்தியர் மைந்தன் நாடி வாசித்த பொழுது தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது.]

நாடி வாசிக்கும் என்னை பலமுறை, பல இடங்களுக்கு அகத்திய பெருமான் செல்ல சொல்வது உண்டு.  ஏன் எதற்கு என்பதறியாமலே அவர் சொன்ன இடங்களுக்கு செல்வேன். ஆனால் அங்கு அவர் நடத்திகாட்டுகிற விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை வரவழைக்கும். மந்த்ராலயம், ரண மண்டலம்,திருப்பதி, பத்ராசலம், அஹோபிலம், ஈரோடுக்கு அருகிலுள்ள சிவ பெருமான் உறையும் மலை,  போன்ற இடங்களை பற்றி முன்னரே சொன்னதுண்டு. அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து, இன்னார் இன்னாரை அழைத்துக்கொண்டு செல், அங்கு நாம் நிறைய விஷயங்களை உரைப்போம் என்றார்.  என்ன என்று திகைத்து போனாலும், அவர் சொல்லை சிரம் மேற்கொண்டு நடத்தி, நானும் என் நண்பர்கள் புடைசூழ கிளம்பி சென்றேன். என்னுடன் வந்தவர்கள் அனைவரும் எத்தனை பாக்கியசாலிகள் என்று பின்னர் தான் புரிந்தது.

என்னை கிளப்பிவிட்டு போகச்சொன்னது திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். வெளியே தெரியாத எத்தனையோ கிராமங்களில் அதுவும் ஒன்று. அதன் பெயர் "கோடகநல்லூர்". அங்கு இரண்டு கோவில்கள் இருக்கிறது. கிராமத்தின் தொடக்கத்தில் சிவ பெருமானின் கோவிலும், கிராமத்தின் மறு கோடியில் "ப்ரஹன் மாதர்" என்றழைக்கப்படுகிற பெருமாள் கோவிலும். நாங்கள் சென்றமர்ந்தது "கோடகநல்லூர் ப்ரஹன் மாதர்" கோவில்.

அன்றைய தினம் 31-10-2009. சனிக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம்,  சுக்ல பக்ஷ த்ரயோதசி திதி.

(இந்த வருடம் நவம்பர் 14ம் தியதி வருகிறது)

அகத்தியர் உத்தரவின் பேரில் ஒரு சிறு சன்னதியை தேர்ந்தெடுத்து, அனைவரும் அமர்ந்திருக்க, நாடியை புரட்டினேன்.  அதில் வந்து அகத்தியர் கூறிய விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை ஊட்டுவதாக இருந்தது.

அகத்தியப் பெருமான் கூறியதை அவர் மொழிந்தது போலவே பார்க்கலாம்.

"ஐப்பசி மாதம் உத்திரட்டாதி உதித்துவிட்ட வேளையிலே, ஓர் கோவில் பற்றி, எதிர்கால நிலைபற்றி, கடந்த கால வரலாற்றைப்பற்றி, அகத்தியன் யாம் 6000 ஆண்டுகளாக இந்த கோவிலை சுற்றி சுற்றி வந்தவன் என்ற முறையில் அகத்திலிருந்து வார்த்தை சொல்கிறேன். முன்பொரு சமயம் இதே நாளில், இதே நட்சத்திரத்தில், இதே நேரத்தில், அகத்தியன், பக்கத்தில் ஒரு நந்தவனத்தில் குடி கொண்டு அங்கு உள்ள பரப்ரஹ்மம் என்று சொல்லக்கூடிய வேங்கடவனுக்கு, அகத்தியன் அபிஷேகம் செய்த புண்ணிய நாளடா இது. இல்லை என்றால் அகத்தியன் ஏனடா இங்கு வரப்போகிறேன். ஆக முன் ஜென்மத்தில், இதே நாளில், இதே நட்சத்திரத்தில் இதே நேரத்தில் அருமை மிகு என் அப்பன் சனீச்வர பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அகத்தியன் வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்த அற்புதமான நாளடா. அதை நினைவு கூறுகிற எண்ணத்தில் தான் அகத்தியனே இங்கு ஏகினோம், நாள் குறித்துக் கொடுத்தோம். ஆகவே, ஆங்கோர் சர்ப்பம் ஒன்று அமையப்போகிறது இங்கு ஆனந்தமாக. இந்தக் கோயிலின் வரலாற்றை இதுவரை, யாருமே சரியாக எழுதினது கிடையாது. 1747 ஆண்டுகளுக்கு முன் இந்த இடம் மிகப் பெரிய நந்தவனமாக இருந்தது. சித்தர்கள் மட்டுமல்ல, முனிவர்கள், மகா முனிவர்கள், முனி புங்கவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஆனந்தமாக இறைவனை வழிபட்ட நல்ல நாள் இது. ஆகவே இந்த புண்ணிய ஸ்தலத்தில் வந்து, தாமிரபரணி நதிக்கரை ஓரமாக அமர்ந்து இந்த வார்த்தைகளை சொல்வதற்கு காரணமிருக்கிறது.  

நிறைய பேருக்கு தெரியாது.  இன்று லோபாமுத்திரை என்று சொல்லக்கூடிய, என்னுடன் இருக்கின்ற மனைவியின் பெயராக உச்சரிக்கின்றனர். லோபாமுத்திரை யார் என்ற கேள்வி இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை. அவள் யார்? பிறந்தது என்ன, வளர்ந்தது என்ன என்று கேட்டதில்லை. அன்னவளே அகத்தியனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதிக்கரைதானடா லோபாமுத்திரை. எங்கும் இல்லாத அதிசயம் தானடா இங்கு நடந்திருக்கிறது. எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு நதி உருவாகி, கிளம்பி பல கிளைகளாக பிரிந்து கடலிலே கலக்கும் போது வேறு மாநிலத்திலே, வேறு கடலிலே கலக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, வேறு உலகத்தில் எங்குமே பார்க்க முடியாத அதிசயம் இங்குதான நடந்துள்ளது.  எந்த மலையில் தாமிரபரணி நதி உற்பத்தியாகிறதோ, அதே நதி நெல்வேலி என்று சொல்லப்படுகின்ற திருநெல்வேலியில், புண்ணிய நதிகளில் நீராடி, நடை கலந்து, உடை அணிந்து ஆனந்தப்பட்டு இங்குள்ள கடலில் கலப்பது போல் வேறு உலகத்தில் எங்கும் இந்த அதிசயத்தை காண முடியாது. அந்த நதியை உண்டாக்கிய பெருமை அகத்தியனுக்கு உண்டடா. ஆகவே அந்த நதியின் பெயரை தான் லோபாமுத்திரை என்று ஆக்கியிருக்கிறேனே தவிர, சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் மனைவி ஏதடா? ஆக, எந்த சித்தனாவது மனைவியுடன் இருப்பதை நீ பார்த்திருக்கிறாயா? பார்த்திருக்க முடியாது. அப்படியென்றால் அகத்தியனுக்கு மட்டும் லோப முத்திரை ஏன் என்று கேட்கலாமே.  இதுவரை ஏன் கேட்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆனால் நான் சொல்ல வேண்டியது கடமை, ஏன் என்றால் அந்த லோபாமுத்திரையை, தாமிர பரணி நதிக்கரையில், இந்த கோடகநல்லூர் புண்ணிய ஸ்தலத்தில் தான் அமர்ந்து உண்டாக்கிய இடம் இது. தாமிரபரணி நதிக்கரையை, லோபாமுத்திரையாக்கி என்கூட வைத்துக் கொண்டிருக்கிறேனே, மனைவி அல்ல. தாமிரபரணி நதிக்கரையில் தான் நான் இருக்கிறேன். பொதிகை மலையில் தான் நான் உலா வந்து கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் இதோ இந்த இடத்தில் தான் இருக்கிறேன். ஏன் என்றால் இரண்டு ஜென்மங்களுக்கல்ல; 1800 ஆண்டுகளுக்கு முன் இங்கோர் நந்தவனம் அமைத்து, என்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தினம் இன்று என ஏற்கனவே சொன்னேனே. அதையும் ஞாபகப் படுத்திக்கொள். தாமிரபரணி நதிக்கரையை, லோபமுத்திரையாக்கி என் அருகில் வைத்துக் கொண்டிருக்கிறேனே,  அந்த அற்புதமான நிகழ்ச்சி நடந்த நாளும் இதே உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றுதான், இதே நாள். முன்ஜென்மத்தில் ஏறத்தாழ 1477 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்லத்தான் இங்கு வந்திருக்கிறேன். ஆக அகத்தியன் உலாவிக்கொண்டிருக்கிறேன். அகத்தியன் மட்டுமல்ல, என்னுடன் இருக்கின்ற 205 சித்தர்களும் இங்கு உலாவிக் கொண்டு இருக்கிறார்கள். அது மிகப் பெரிய விசேடமடா. இதுவரை அகத்தியனுக்கு 18 சித்தர்கள் என்று தான் பெயர். அகத்தியனை தலையாய சித்தர் என்று சொல்வார்கள். சிவ மைந்தன் என்று சொல்வதுண்டு. சிவ மைந்தன் என்பது ஒரு புறம் இருக்க; நான் அக்னியில் உண்டானவனடா! சிவனுக்கு கண்ணிலோ, நெற்றியிலோ உண்டானவன் அல்ல. சிவன் செய்த யாகத்தினால் உண்டாக்கப்பட்டவன் நான். ஆகவே சிவ மைந்தன் என்று சொல்வார்கள். 

சிவன் மட்டுமல்ல, விஷ்ணுவும் தங்கள் அதிகாரத்தை அகத்தியன் ஆன என்னிடம் ஒப்படைத்த நாளும் இந்த நாள் தான். இந்த நாள் எத்தனை விசேடமான நாள் என்று சொல்லத்தான், உங்கள் அனைவரையும் தாமிர பரணி நதிக்கரைக்கு வரச்சொன்னேன். ஆகவே, இந்த நாளில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. ஒன்று, அகத்தியனே இந்த பெருமாளுக்கு, அங்கமெல்லாம் பால் அபிஷேகம், 14 வகை அபிஷேகம் செய்து குளிரவைத்த அற்புதமான நாள் இதே நாள் தான். தாமிரபரணி நதிக்கரையை லோபாமுத்திரையாக மாற்றிய நாள் இந்த நாள். அது மட்டுமல்ல, இந்த கோவிலுக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு,அது சரியாக எழுதப்படவில்லை என்று சொன்னேன்.குறை சொல்வதற்காக அல்ல. குறையே அல்ல இது.

ஒரு சமயம், அசுரனாக இருக்கின்ற ஆதிசேஷனும், கார் கோடகனும் கொடி கட்டி பறந்த காலம். மிகப் பெரிய முனிவரின் மூன்று வயது குழந்தையை ஆதிசேஷன் கொத்திவிட்டதால், உயிர் துறக்கும் நேரத்தில், முனிவர்கள் துதித்தார்கள். "பெருமாளே இத்தனை நாள் உனக்கு அபிஷேகம் செய்தேனே, ஒரு விஷ பாம்பு என் குழந்தையை கொன்று விட்டதே! குழந்தையை உயிர்பித்து தரமாட்டாயா? என்று முனிவர் அவர் கேட்டார்.  அப்பொழுது அகத்தியன் நான் கூட இருந்தேன். அந்த நேரத்தில் தான் கருடன் இங்கே வந்தான். கருடனை பார்த்ததும் பாம்பது ஓடியது. கருடனே தன் மூக்கால் விஷத்தை எடுத்த நாளும், இந்த புண்ணிய நாள்தாண்டா. எவ்வளவு பெரிய அதிசயங்கள் நடந்திருக்கிறது தெரியுமா? யாருக்கு தெரியும் இந்த வரலாறு. ஆகவே எந்த கோவிலும் இல்லாத சிறப்பு இந்த கோவில் கருடனுக்கு இருக்கிறது. இந்த கருடனுக்கு அபிஷேகம் நடக்கிற காரணமே இது தானடா. விஷத்தை விஷத்தால் எடுக்கவேண்டும் என்கிற பழ மொழியையும் தாண்டி, விஷத்தை "கருடன்" முறித்தார் என்கிற நிகழ்ச்சி இங்குதான் நடந்திருக்கிறது. இது நடந்தது ஏறத்தாழ 1377 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் தான். இந்த ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம் அத்தனை விசேஷமான நாள் தான். எவ்வளவு பெரிய வரலாற்றை எல்லாம் சுமந்து கொண்டிருக்கிறது இந்த புண்ணிய பூமி என்பது தெரியுமா?

இங்கு ஒன்று சேர்ந்திருக்கும் இவர்கள் அந்த காலத்தில் ஒரு நீராடி மண்டபத்தை கட்டியிருக்கிறார்கள். நீராடி மண்டபத்தை மட்டுமல்ல, பொய்கை குளத்தை கட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கண்ணாடி பல்லக்கு என்று சொல்லக்கூடிய, தங்கப் பல்லக்கை கட்டியிருக்கிறார்கள். இந்த கோயிலுக்கு ஏற்கனவே, 300 ஏக்கர் நஞ்சையும், 300 ஏக்கர் புஞ்சை நிலமும் உண்டு. மாமரம், தென்னை மரம், பலா மரம் போன்ற மரங்களும், மொத்தத்தில் அகத்தியன் கணக்குப் படி பார்த்தால் இந்த நெல்லை மாவட்டத்தின் நுனி வரை பொதிகை மலையின் அடிவாரம் வரை இந்த கோயிலுக்கு சொந்தம். இந்த கோயிலுக்கு சொந்தமாக, வல்லபாய குலோத்துங்க சோழன் என்ற மன்னன் கோயிலுக்காக பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறான். இந்த கோயிலில் அன்று முதல் இன்று வரை பரம்பரை தர்மகர்த்தாக்கள் என்று சொல்லக்கூடியவர்களின் வாரிசுகள்தான் இன்றைக்கு நடத்திக் கொண்டு வருகிறார்கள்.  இவர்கள் எல்லாம் அநபாய சோழன், குலோத்துங்க சோழ அரசவையிலிருந்து இந்தக் கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருந்தவர்கள். இந்த கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருக்கும் போதுதான் அங்கமெல்லாம் அபிஷேகம்,  அன்றாடம் ஆறுகால பூஜை நடந்த அறுபுதமான இடம் இது. அதுமட்டுமல்ல, இந்த கோயிலுக்காக, இந்த வம்சம் நல்லபடியாக தழைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, மூன்றே மூன்று பேர்கள் தான் இங்கு மாறி மாறி வரும். ஒன்று கிருஷ்ணஸ்வாமி  என்று வரும்.இன்னொன்று ஸ்ரீநிவாசன் என்று வரும். இன்னொன்று திருவேங்கடாச்சாரி என்று வரும். திருவேங்கடாச்சாரி என்பது பின்னர் ராமசாமி என்று மாற்றப்பட்டது. இந்த பரம்பரை நிர்வாகத்துக்காக, அநபாய சோழனும், குலோத்துங்க சோழனும் எழுதிகொடுத்த பட்டயம் இந்த கோயிலின் வடகிழக்கு திசையில் 40 அடிக்கு கீழே இருக்கிறது. அந்த செப்பு பட்டயத்தை எடுத்துப் பார்த்தால், எத்தனை நிலங்களை காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை காணிக்கையும் பெற்று தான் அறங்காவலர்கள் இந்த கோவிலை நடத்தி வந்துள்ளனர். 

ஆகவே, கோடகன் என்பவன் கொடிய விஷம் கொண்டவன். அவன் மூச்சு விட்டாலே முன்னூறு காதம் (மைல்) விஷம் பரவி அனைத்தும் இறக்கக்கூடும். அவ்வளவு கடுமையான விஷத்தை உடைய  "கார் கோடகன்" குடியிருந்த இடம். அவன் அரசாட்சி செய்து கொண்டிருந்த இடம். அவனை யாரும் நெருங்க முடியாமல், அரக்கர்களின் உச்சகட்ட ஆட்சி நடந்து கொண்டிருந்த இடம். அங்கு தான் பராசரமுனிவரும், பரஞ்ஜோதி முனிவரும், இன்னும் பல முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த அரக்கனின் பலத்தை குறைப்பதற்காக கடும் தவம் இயற்றி வேங்கடவனை வணங்கினார்கள். வேங்கடவனே "ப்ரஹன் மாதா" என்கிற பேரிலே வந்தமர்ந்தான். ப்ரஹன் மாதவுக்கும் அந்த சோதனை எற்பட்டதடா. அவனையும் அரக்கன் விடவில்லை, சுற்றி வந்தான். மூச்சுவிட்டான். ஒன்றும் நடக்கவில்லை. அதன் காரணமாக தன்னை பச்சை நிறமாக மாற்றிக்கொண்டான் வேங்கடவன். கார்கோடகன் என்று சொல்லக்கூடிய அரக்கன் ப்ரஹன் மாதாவை தீண்ட முயற்ச்சித்தான். ப்ரஹன் மாதா பச்சை நிறத்தில் ஜொலித்தான். பச்சை என்பது பசுமையடா. பச்சை என்பதற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு. ஆக, யார் யார் பச்சைக்கல் நவரத்னத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆரோக்கியம் கெடாது, வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான், பச்சை தான் புதன், புதன் தான் விஷ்ணு. ஆகவே பச்சைக்கும், விஷ்ணுவுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு. அதை எல்லாம் எடுத்துக்காட்டிய அற்புதமான நாள் இது தான்.

தொடரும்!

1 comment: