Wednesday 7 September 2016

கோடகநல்லூர் - அகத்தியர் ஜீவநாடியில் வந்த தகவல் - 4


அந்த காலத்தில் மிகப் பெரிய அக்ரகாரம் இருந்தது. அற்புதமான மனிதர்கள் இருந்தனர். அத்தனை பேரும் கூண்டோடு அழிந்து விட்டார்கள். ஒரு சமயம், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அக்ரமங்கள் சற்று அதிகமாக போன போது, ஒரு பிரளயம் ஏற்படவேண்டும் என்று தீர்மானித்து தாமிரபரணியில், யாமே வெள்ளப் பெருக்கை உண்டாக்கினோம். அதன் காரணமாக பொல்லாத நபர்களெல்லாம், ஏறத்தாழ, ஒரு லட்சத்திற்கு மேல் அழிந்து விட்டனர். 

இந்த சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாம் அருமையான இடம். அவ்வளவு தெய்வ அம்சம் பொருந்திய இடம். தெய்வங்கள் நடமாடிய இடம். இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு. இந்த தாமிரபரணி நதியை அத்தனை சாதாரணமாக நினைக்கக் கூடாது. இந்த நதி இந்த இடத்தில் தான் புனிதம் கெட்டுவிடவில்லை. இப்பொழுது கூட, அகத்தியன் இந்த வார்த்தையை சொல்லுகிறபோது, தாமிரபரணி நதி பக்கத்தில் உட்கார்ந்து, காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறாளடா. அந்த அனுபவம் கண் மூடி த்யானித்துப் பார்த்தால், புல்லரிக்கும், புல்லரிக்கின்ற குளிர்ச்சி பரவும். அப்படி பரவும் குளிர்ச்சி கூட தாமிரபரணி உங்களுக்கு கொடுக்கிற வாழ்த்துக்கள் என்று எண்ணிக்கொள். வானமே இந்த நல்லதொரு நாளில் தானே விரும்பி வந்து அமர்ந்திருக்கிறது. வானத்துக்கு பலம் மேகம், அந்த மேகத்துக்கு அதிபதி வருண பகவான். இதோ இங்கு பக்கத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, திரும்பி பார்க்கிறேன். என் அப்பன் அனுமன் அதோ ஓரத்தில் கை கூப்பி, வாய் பொத்தி; என்ன தாசச்ய வினயத்தோடு உட்கார்ந்திருக்கிறார். என் கண்ணுக்கு தெரிவதெல்லாம் உங்களுக்கு சொல்லுகிறேன்.  நீங்களும் முடிந்தால் கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள். அகத்தியன் சொல்லை மட்டும் கேளுங்கள். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் அந்த காட்சி உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஏன் என்றால் தெய்வங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற நேரம்.  ஒரு சமயத்தில்,ஆஞ்சநேயர் வந்து ராமபிரானோடு இந்த தாமிரபரணி நதிக்கரையில் நீராடி, அமர்ந்து, மனம் விட்டு பேசி, நீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தமாக இருந்த இடம். ராமர் சிரித்தது அபூர்வம். ராமர் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்து, கடைசி வரை எடுத்துப் பார்த்தால், வாழ்க்கை எல்லாம் ரொம்ப சோகம். ஆனால் எல்லாம் சோகமாக இருந்தால் கூட, அத்தனை பேர்களும் "ராமஜயம்" என்று எழுதுகிறோமே தவிர " கிருஷ்ண ஜெயம்" என்று எழுதுவதில்லை.  வேறு எந்த  ஜெயமும் எழுதுவதில்லை. "ஹயக்ரீவர் ஜெயமும்" எழுதுவதில்லை. ராமர் அப்படிப்பட்ட ராமர். ராமரின் மறு அவதாரமாக, பச்சை வண்ணன் இதோ அமர்ந்திருக்கிறான். சிலையாக அமர்ந்த நாளும் இந்த  நாள் என்று ஏற்கனவே சொன்னேன். அந்த நாள் திரும்ப ஞாபகத்துக்கு வருவதால் அதையே சொன்னேன். சிறப்பு மிக்க புண்ணிய பூமியில் இன்றைய தினம் அமர்ந்திருக்கிறோம். ஒருவன் தெய்வத்துக்காக செய்கின்ற காரியங்களுக்கு எல்லாம், அவன் மூன்று ஜென்மமாய் குடும்பம் நன்றாக தழைக்கும். அவர்கள் செய்த பாபங்கள் அத்தனையும் தூள் தூளாகும். அவன் குடும்பம் முன்னூறு ஆண்டுகளாய் இன்னும் சீர் பெற்று, சிறப்பு பெற்று வாழும். நாகலிங்கத்தைப் பற்றிச்சொன்னேன். ஆதிசேஷன் அவதாரம் தான், என்று ஆதிசேஷன் சொல்ல வேண்டும். ஏன் என்றால் இங்கு கருடனுக்குத்தான் பால் அபிஷேகம். பாம்புக்கு அல்ல. ஆக, பாம்புக்கு சமமான கோபத்துடன், இங்கிருந்து ஆட்சி செய்ததினால் தான், இன்றைக்கும் கார்கோடகன் என்றால் அவ்வாறு எண்ணுகிறார்கள்.

ஆனால் ஒரு தீமை வந்தால் தான் ஒரு நன்மை விளையும் என்பதற்கு அன்றைக்கே ஒரு உதாரணம் ஆக இருந்தவன் தான் கார்கோடகன். கருட பகவானும் இங்கு பக்கத்திலே அமர்ந்திருக்கிறான். அவன் பக்கத்திலேயே ஆதிசேஷனும் அமர்ந்திருக்கிறான். என்ன ஒற்றுமை பார்த்தாயா! மனிதர்களுக்குத்தான் பகைமை உண்டு. தேவர்களுக்கு பகைமை இல்லை. அவர்களுக்கும் பிளவு உண்டு, அதை தாண்டித்தான் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கு இராவணன் அவதாரம் என்பதில், இராவணன் கொல்லப்பட்டான் என்று சொல்கிறார்கள். இராவணன் கொல்லப்படவில்லை. இராவணன் போல் இருப்பவன் கொல்லப்படவேண்டும், தர்மம் செழிக்கவேண்டும் என்பதற்காகத்தான். அன்றும் ஆதிசேஷன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். இங்கே கருடாழ்வாரும் பக்கத்தில் அமர்ந்து, பெருமாளை கண் கொட்டாமல் ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த அரிய காட்சிகளை எங்கு சென்றாலும் காணமுடியாது. ஆக, இரு துருவங்கள் ஒன்று சேர்ந்து, பகவானை, அதாவது விஷ்ணுவை, கை கூப்பி வணங்குகிற காட்சி இப்பொழுது பார்க்கிறேன். இந்த அருமையான நாள், அகத்தியனுக்கு உகந்த நாள். ஆகவேதான் அகத்தியன் உங்களை இங்கு வரச்சொன்னேன். அகத்தியன் விஷ்ணுவாகவும் இருக்கிறேன், பிரம்மாவாகவும் இருக்கிறேன், சிவனாகவும் இருக்கிறேன். ஆகவே, எனக்கு நடமாடும் இடமே இந்த பொதிகை மலை தானடா. இப்பொழுதுதான் பொதிகை மலையிலிருந்து பேசிவிட்டு வந்தேன். இப்பொழுது உங்கள் பக்கத்திலிருந்து அமர்ந்து கொண்டுதான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என்னுடன் இங்கு இருக்கின்ற அத்தனை பேர்களுமே, சதுரகிரிக்கு போக விரும்பினார்கள். சதுரகிரி இருக்கும் திசை நோக்கி வணங்கினால், அங்கிருக்கும் சித்தர்கள் அனைவருமே இங்கிருந்து, ஆசிர்வதிக்கும் காட்சியை எனக்கு காண முடிகிறது. ஆக எல்லா தெய்வங்களும், எல்லா மனிதர்களும் ஒன்று சேரும் நல்ல நாள் இது. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் யார் யார் அகத்தியனை வணங்கி வந்தார்களோ, எவர் எவர், இந்த பச்சை வண்ணனை வணங்கி சேவை செய்தார்களோ, அவர்களுக்குத்தாண்டா இந்த கோடகநல்லூர்ருக்கு அகத்தியன் வரவேற்று, அவர்கள் செய்த பாபங்களில் 33 விழுக்காடுகளை விலக்கியிருக்கிறேன். ஏற்கனவே புண்ணியத்தையும் தந்திருக்கிறேன். இப்பொழுது கடைசியாக, அவர்கள் செய்த பாபங்கள், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, கோபத்திலோ, ஆத்திரத்திலோ செய்த பாபங்கள், விதியின் செயலால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். மனிதர்கள் தானே, சற்று நிறம் மாறியிருப்பார்கள். குணம் மாறியிருப்பார்கள். வாக்கில், நாக்கில் நரம்பில்லை. எது வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். புண்பட நடந்து கொண்டு இருக்கலாம். ஆனால் அது அத்தனையும் தாண்டி இவர்களுக்கு, இன்றைய தினம் மிகப்பெரிய புண்ணியத்தை, 33 சதவிகித புண்ணியத்தை என் அருமை தாமிரபரணி நதியே அவள் சார்பாக அவர்களுக்கு வழங்குகிறாள். அந்த பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். தாமிரபரணி நதி எப்படிப்பட்ட  நதி என்று சொல்லியிருக்கிறேன், கங்கையின் பாபம் போன நதி. அவளே தன் கைப்பட சொல்லுகிறாள், "என்னால் ஆனதை இங்குள்ள அனைவருக்கும் 33 விழுக்காடுகள் தருகிறேன்". இன்று முதல் நீ எடுத்துப்பார். உதிரத்தை கூட எடுத்து விஞ்சான ரீதியில் சோதனை செய்து பார். அங்கொரு வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடம் தான் இந்த தாமிரபரணி நதிக்கரை. ஆசியோடு உங்களுக்கு கொடுத்த புண்ணியம். அந்த புண்ணியத்தை வாங்கிக்கொள். இன்று முதல் இங்குள்ள அனைவருக்கும் எல்லா க்ஷேமமும் கிடைக்கட்டும். நல்லதொரு வாழ்க்கை அமையட்டும். கடந்தகால வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு, ஒரு புதிய வாழ்க்கை தொடங்கட்டும், என்று இந்த கோடகநல்லூர் விஷ்ணுவின் சார்பில், என்னுடன் இருக்கின்ற 204 சித்தர்கள் சார்பில், முனி புங்கவர் ஜமதக்னி வந்திருக்கிறார். ஜமதக்னி யார். எவ்வளவு பெரிய மகான். கங்கை நதிக்கரையில், பூமிக்கடியில் 4000 ஆண்டுகளாக தவம் செய்கின்ற மாமுனி. அவரும் இதோ வந்திருக்கிறார். அன்னவனுக்கு, அகத்தியன் தண்டம் இட்டு சமர்ப்பிக்கிறேன். முனிவர்கள் போற்றுதல் என்பது இயலாத காரியம். அவரின் நல்லதொரு வாக்கை உங்களுக்கு வாங்கி தருகிறேன். நீங்களெல்லாம் கடும் தவம் செய்து காட்டிலே, தண்ணீர் கூட இல்லாமல், பல ஆண்டுகள் ஜபம் செய்து தவத்தை செய்திருக்கவேண்டும். உங்கள் மேல் புற்று வந்திருக்கவேண்டும். புற்றாகி இருந்து கூட நீங்கள் ஜபத்தை செய்திருக்க வேண்டும். அப்படி செய்தவர்களுக்குத்தான் மோக்ஷம் கிட்டும். மோக்ஷ உலகம் கிடைக்கும். வைகுண்ட பதவி கிடைக்கும். ஆனால் ஜமதக்னி போன்ற முனிவர்கள் எல்லாம் அருள் கூர்ந்து வாழ்த்துவதை கண்கூடாக நான் காண்கிறேன். ஆக, அகத்தியனுகல்ல அந்த வாழ்த்து, இங்கு அமர்ந்திருக்கும் உங்களுக்குத்தான். இந்த கோடக நல்லூரிலே, ஆன்மீக பணி செய்கின்ற அத்தனை பேர்களுக்கும், உயிர்களுக்கும் அந்த அருள் போய் சேரும். இங்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இன்றைய தினம் மிகப் பெரிய பரிசு போல, அகத்தியன் யான் விரும்புவதெல்லாம், இங்குள்ளவர்களுக்கு எல்லாம் நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும். இனியது நடக்கவேண்டும். இயலாமை போகவேண்டும். கோபம் ஒழிய வேண்டும். மனதில் புண்ணியமது செழிக்கவேண்டும். அதுமட்டுமல்ல, ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறேன். நிறைய பேருக்கு தெரியாது. இங்குள்ள பலருக்கு எதிர் காலத்தில், மறு பிறவி இல்லை என்பது உண்மை. அந்த நல்லதொரு வாழ்த்தையும், விதிமகளின் சார்பாக அகத்தியன் உங்களுக்கு அளிக்கிறேன். யார் அந்த மறு பிறவி இல்லாதார்வர்கள் என்று இப்பொழுது சொல்ல மாட்டேன். காரணம் உங்களுகெல்லாம் உடனே திமிர் வந்துவிடும். ஆகா! எனக்குத்தான் மறு பிறவி இல்லையே, நான் எந்த தப்பும் செய்யலாம் என்று தோன்றிவிடும். ஆகவே, சற்று அடக்கமாக சொல்கிறேன். இங்குள்ள பலருக்கு மறுபிறவி இல்லாமல் அகத்தியன் பார்த்துக்கொள்கிறேன். செய்த பாபங்களுக்கு மோக்ஷத்தை தருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். 

என் அருமை லோபமுத்திரா என்று சொல்லக்கூடிய தாமிரபரணி நதிக்கரை உங்களுக்கு 33 விழுக்காடு புண்ணியத்தை தந்திருக்கிறாள். ஆக ஏற்கனவே அகத்தியன் கொடுத்த புண்ணியம், தாமிரபரணி நதி கொடுத்த புண்ணியம், அபிஷேகம் நடந்த அற்புதமான நாள் இது. இதே நாளில் தான் நீங்கள் அனைவருமே, அந்த அற்புத சம்பவம் நடந்ததை கண்ணால் பார்த்திருக்கிறீர்கள். நான் சொன்னேனே பல சம்பவங்கள். அத்தனை சம்பவத்தை கண்ணாலே பார்த்த புண்ணியம் உங்களுக்கு இருந்திருக்கிறது. அதனால் தான் இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது, என்று சொல்லி, எல்லாம், எல்லோரும் வளமுடன் வாழ்க என அருளாசி.

நிறைவு பெற்றது!

2 comments:

  1. Om Agatheesaya Namaha, Om Sri Lopamudhra Sametha Agatheesaya Namaha

    ReplyDelete
  2. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete